அண்ணா பல்கலை. எஞ்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு: எழுத்துத் தேர்வு உறுதி

 பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைனில் நடந்து வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டு வருகின்றன.



இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. 


அதன்படி, பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இன்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் அல்லாமல், நேரடியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதனால் ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்றும், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.


மேலும், வெகுநாட்களுக்கு எழுத்துத் தேர்வை ஒத்திவைத்துக் கொண்டே இருக்க முடியாது. இது மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கும். கல்லூரிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும்போது, எழுத்துத் தேர்வு முறையைத் தொடங்க இது தான் சரியான நேரமாக இருக்கும் என்றும் துணைவேந்தர் கூறியுள்ளார்.



இதனிடையே, பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வானவர்கள் இன்றுமுதல் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Powered by Blogger.