Z+, Y+ பாதுகாப்பு என்றால் என்ன?அவை யாருக்க வழங்கப்படுகிறது?

இந்தியாவில் குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், புகழ்பெற்றவர்கள், மிக முக்கிய நபர்கள் மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் தனி நபர்கள் என்று பலருக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பாதுகாப்பானது, பதவி நிலை மற்றும் அச்சுறுத்தலின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. அவை SPG, Z+, Z, Y+, Y, X என்று ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.



SPG பிரிவு

சிறப்புப் பாதுகாப்புக் குழு (Special Protection Group - SPG) எனப்படும் இப்பாதுகாப்புப் பிரிவு, இந்தியப் பிரதமர் மற்றும் அவரது நேரடிக் குடும்ப உறுப்பினர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான ஒரு தனி அமைப்பாகும். 1988 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தச் சிறப்பு பாதுகாப்புப் படை, இந்தியப் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மெய்காவல் படையாகவும் செயல்படுகிறது. 


இந்தியத் துணை இராணுவப் படைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 வீரர்களைக் கொண்ட இப்படையானது, இந்திய அரசின் தலைமைச் செயலகத்தின் கீழ், மூத்த இந்திய ஆட்சிப் பணி தகுதி படைத்த தலைமை இயக்குநரின் தலைமையில் இயங்குகிறது. இச்சிறப்புப் பாதுகாப்பு தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்பாதுகாப்புப் பணிக்காக 2020 - 2021 ஆம் ஆண்டுக் காலத்திற்கு 592 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.



Z+ பிரிவு

Z+ பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 10 வீரர்கள் மற்றும், ரயில்வே பாதுகாப்புப்படை, இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்தியப் பாதுகாப்புப் படை, மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படை போன்றவற்றிலிருந்து தேர்வு செய்யப் பெற்றவர்கள் உள்ளிட்ட 55 காவல்துறைப் பணியாளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். 


இப்பிரிவில் சில குண்டு துளைக்காத வாகனங்களுடன், 5 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பிரிவின் மூலம் முன்னாள் பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளான தனி நபர்கள் (தலைவர்கள்) ஆகியோருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், உமா பாரதி, மு. க. ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு, முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் இப்பாதுகாப்பினைப் பெற்றிருக்கின்றனர். இப்பாதுகாப்புப் பணிக்காக, ஒரு குழுவிற்கு மாதம் இருபது லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.



Z பிரிவு

Z பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 4 முதல் 6 வீரர்கள் (தேவைக்கேற்ப) உள்ளிட்ட 22 காவல்துறையினர் இடம் பெற்றிருக்கின்றனர். இப்பிரிவில் ஒரு குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாதுகாப்புப் பணிக்கு ஒரு தனிப்படைக்கு மாதம் பதினாறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.


Y+ பிரிவு

Y+ பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 2 முதல் 4 வீரர்கள் (தேவைக்கேற்ப) உள்ளிட்ட 11 காவல்துறையினர் இடம் பெற்றிருக்கின்றனர். இப்பிரிவில் 2 முதல் 3 வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. இப்பாதுகாப்புப் பணிக்கு ஒரு தனிப்படைக்கு மாதம் பதினைந்து லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.



Y பிரிவு

Y பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 1 அல்லது 2 வீரர்கள் (தேவைக்கேற்ப) உள்ளிட்ட 8 காவல்துறையினர் இடம் பெற்றிருக்கின்றனர். இப்பிரிவில் 1 அல்லது 2 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாதுகாப்புப் பணிக்கு ஒரு தனிப்படைக்கு மாதம் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.


X பிரிவு

X பாதுகாப்புப் பிரிவில் 2 காவல்துறையினர் மட்டும் இடம் பெற்றிருப்பர். இப்பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த எவரும் இருப்பதில்லை. இப்பிரிவில் 1 அல்லது 2 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


Z, Y+, Y மற்றும் X பிரிவில் இந்தியா முழுவதும் 300-க்கும் அதிகமானவர்களுக்குத் தனிப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.



No comments:

Powered by Blogger.