புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for new ration card?

 ஒரு குடிமகனுக்கு அத்தியாவசியமான அடிப்படை அடையாள அட்டைகளைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை, அதன் தேவை ஏற்படும்வரை நாம் அறிந்துகொள்வதில்லை. அப்படியே தேவை ஏற்படும்போதும், அந்த நடைமுறைகளில் நமக்கு ஒருவித தடுமாற்றம் ஏற்படுகிறது. அது தேவையேயில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் அதற்கான நடைமுறைகள் எல்லாம் மிகவும் எளிமையாக்கப்பட்டிருக்கின்றன.



விண்ணப்பிக்கும் முன்..!


ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, உங்களது பெயரை ஏற்கெனவே உள்ள ரேஷன் கார்டிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். எனவே, முதலில் உங்களது பெயரை பழைய ரேஷன் கார்டிலிருந்து எப்படி நீக்குவது என்பதைப் பார்த்துவிடலாம்.



ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பது எப்படி?


`புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி?’ - புதிதாகத் திருமணமானவர்கள் மத்தியில் இந்தக் கேள்வி பிரதானமானதாக இருக்கும். முன்பு இருந்ததைப்போல, ரேஷன் கார்டு பெறுவது இப்போது கடினமான விஷயம் இல்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டைப் பெற்று விடலாம். புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பது, பழைய ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குவது ஆகியவை குறித்த நடைமுறைகளைப் பார்க்கலாம்.



புதிய ரேஷன் கார்டு (மின்னணு அட்டை)க்கு விண்ணப்பிப்பது எப்படி?


www.tnpds.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று, `மின்னணு அட்டை சேவைகள்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில், `மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். குடும்பத் தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம் அல்லது வட்டம், எந்தக் கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் கோரப்பட்டிருக்கும். அவற்றைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும்.

`குடும்பத் தலைவர் புகைப்படம்’ என்ற இடத்தில், உங்களின் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை jpeg, jpg, png ஆகிய ஏதாவது ஒரு ஃபார்மேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் அதிகபட்சம் 5MB-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, `உறுப்பினரைச் சேர்க்க' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து ஓப்பன் ஆகும் பக்கத்தில் முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.


தொடர்ந்து, கீழே குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் (முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களைச் சேர்க்கவும்) என்ற குறிப்புக்கு அருகில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் `உறுப்பினர்களைச் சேர்க்க’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பிறகு, ஓப்பன் ஆகும் பக்கத்தில் குடும்பத் தலைவரின் பிறந்த தேதி, தொழில், மாத வருமானம், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்யவும்.


`மற்ற ஆவணங்கள்’ என்ற இடத்தில் குடும்பத் தலைவருடைய ஆதார் அட்டையின் இருபுறத்தையும் ஸ்கேன் செய்து (இருபுறமும் ஒரே பக்கத்தில் அருகருகில் இருப்பதைப் போல இருக்க வேண்டும்) பதிவேற்ற வேண்டும். அளவு 1MB-க்குள்ளாக இருக்க வேண்டும்.


அடுத்ததாக `அட்டைத் தேர்வு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். தொடர்ந்து பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, மற்றவை என நான்கு வகையான அட்டைகள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு எந்த வகை ரேஷன் அட்டை வேண்டுமோ அந்த அட்டையைத் தேர்வு செய்துகொள்ளவும்.


தற்போது குடும்பத் தலைவரின் விவரங்கள் அனைத்தும் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகு, `உறுப்பினர் விவரம் சேமி’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். தொடர்ந்து குடும்பத் தலைவரின் பெயர் மட்டும் ஓர் அட்டவணைக்குள் காட்டப்படும். அதன் மேலே உள்ள `உறுப்பினரைச் சேர்க்க’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, குடும்பத் தலைவரை சேர்த்ததுபோலவே நீங்கள் சேர்க்க வேண்டிய உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

`குடியிருப்புச் சான்று' எனக் கோரப்பட்டிருக்கும் இடத்தில் ஆதார் அட்டை, மின்சாரக் கட்டணம், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்கம், எரிவாயு நுகர்வேர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் நீங்கள் சமர்ப்பிக்கும் வகையிலான ஏதாவதொரு சான்றைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதையடுத்து, நீங்கள் தேர்வுசெய்த ஆவணத்தின் நகலைப் பதிவேற்ற வேண்டும். அந்த ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மேட்டிலும் இருத்தல் வேண்டும்.


அடுத்தபடியாக உங்களின் எரிவாயு இணைப்பு விவரங்களைப் பதிவு செய்யவும். அதைத் தொடர்ந்து, `உறுதிப்படுத்துதல்’ என்ற ஆப்ஷனை டிக் செய்யவும். அதையடுத்து, `பதிவு செய்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பதிவு செய்துகொள்ளவும். அதையடுத்து, `உங்களது கோரிக்கை வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டது' என்ற அறிவிப்புடன் உங்களுக்கான குறிப்பு எண் திரையில் தோன்றும். உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க அந்த எண் அவசியம் என்பதால் அதைக் கவனமாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.



ஓரிரு தினங்கள் கழித்து, உங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிய www.tnpds.gov.in இணையதளத்துக்குச் சென்று மின்னணு அட்டை சேவைகள் என்ற இடத்தில், `மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ என்பதை க்ளிக் செய்யவும். அதைத் தொடர்ந்து ஓப்பன் ஆகும் புதிய பக்கத்தில் உங்களின் குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து `பதிவு செய்ய’ என்பதை க்ளிக் செய்யவும்.


அதையடுத்து ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்கள் விண்ணப்பம் தொடர்பான `கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, கோரிக்கை அனுமதிக்கப்பட்டது’ என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் எதில் பச்சை வண்ணத்தில் டிக் மார்க்குடன் இருக்கிறதோ அதுதான் உங்கள் விண்ணப்பத்தின் நிலை. வலதுபுறத்தில் நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை டௌன்லோடு செய்துகொள்ளலாம்.



உங்களது கோரிக்கை அனுமதிக்கப்பட்ட பிறகு, நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகளில் ஒன்றாக உங்களுடைய வீட்டுக்கே விசாரணைக்கு வரலாம். அப்போது உங்கள் பெயர் பழைய ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டதற்கான சான்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தவிர, நீங்கள் குறிப்பிட்டிருக்க விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.


அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு பதிவு எண் அனுப்பப்படும். வட்ட வழங்கல் அலுவலகத்தில் உங்களுடைய புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (1967 or 1800-425-5901) என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.


No comments:

Powered by Blogger.